

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் 2026-2027-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான முன் னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் எந்தெந்த திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்பதை முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து வருகிறார்.
த.வெ.க. சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை ரூ.2500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை அரசு ஆய்வு செய்வதாக தெரிகிறது.
இந்த நிலையில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் பற்றி முதலமைச்சர் விஜய் துறை வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று உணவு, கூட்டுறவு மற்றும் வருவாய்த்துறை சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து 2-வது நாளாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என்.ஆனந்த், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார்.
நெடுஞ்சாலைத் துறையில் புதிதாக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம். எவ்வளவு கிலோ மீட்டருக்கு புதிய சாலைகள் அமைக்கலாம் என்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வருகிற 22-ந்தேதி வரை பட்ஜெட் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு கோடி ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் முதலமைச்சர் விஜய் ஒப்புதல் பெற்று பட்ஜெட் தயாரிக்கப்படும். அதன் பிறகு பட்ஜெட்டுக்கு முழு வடிவம் கிடைக்கும்.