

பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் 16 வயதுடைய சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பிரம்மதேசம் அருகில் உள்ள கல்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்களுடன் தனது பாட்டி வீட்டிற்கு வந்தார்.
நேற்று முன்தினம் சுப நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் கும்பல் சிறுமியை கடத்தி சென்றனர். அவர்கள் தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
அவரை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து சிறுமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார், பிரம்மதேசம் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பகுதியில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த கிராமம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பின்னரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது தெரியவரும்.
இதில் 8 பேர் கும்பல் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. கும்பல் கஞ்சா போதை ஆசாமிகளா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பட்டு கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பதட்டமான சூழல் நிலவியது.