

பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரசு ஆவணங்கள் மற்றும் கடிதங்களை விநியோகிக்காமல், தன் வீட்டிலேயே 7 மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த தபால்காரர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையின் பின்னணி..
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை கிளை தபால் நிலையத்தில் செந்தில்குமார் என்பவர் தபால்காரராகப் பணியாற்றி வந்தார்.
இந்த பகுதி மக்களுக்கு வர வேண்டிய முக்கியமான அரசு கடிதங்கள், வங்கி ஆவணங்கள், மற்றும் ஏடிஎம் கார்டுகள் நீண்ட நாட்களாக உரிய நபர்களுக்குச் சென்றடையவில்லை என்று புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து திருப்பூர் கோட்ட தபால் துறை அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை அனுப்பினர்.
வீட்டில் சிக்கிய 7 மூட்டை கடிதங்கள்..
புகாரின் அடிப்படையில், தபால் துறை அதிகாரிகள் தபால்காரர் செந்தில்குமாரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் அதிர்ச்சியடையும் வகையில், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ஆயிரக்கணக்கான கடிதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் 7 பெரிய சாக்கு மூட்டைகளில் கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிரடி பணியிடை நீக்கம்..
அரசு ஆவணங்களைப் பொறுப்பற்ற முறையில் பதுக்கி வைத்தது மற்றும் பொதுமக்களுக்குச் சேவை குறைபாடு ஏற்படுத்திய குற்றத்திற்காக, தபால்காரர் செந்தில்குமாரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கடிதங்களை உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க தபால் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.