ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி- 3 பேர் சிக்கினர்

3 மர்ம நபர்கள், கடப்பாறையால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்ட அந்த மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
உடைக்கப்பட்ட ஏடிஎம் எந்திரம்
உடைக்கப்பட்ட ஏடிஎம் எந்திரம்
Published on

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த சந்தைப்பேட்டையில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவர் செங்கல் சூளை தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் ஒரு பகுதியில் கடந்த ஓராண்டாக, ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தீவட்டிபட்டியில் இருந்து சந்தைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வெங்கடேஷ் வீட்டின் அருகே வைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். எந்திரத்தின் அருகே இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு 3 மர்ம நபர்கள், கடப்பாறையால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தனர். இதை ரோந்து போலீசார் பார்த்துள்ளனர்.

இதேபோல் போலீசாரை கண்ட அந்த மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தப்பிச் சென்றவர்களில் ஒரு நபர், தீவட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தான். அவனை மடக்கிப் பிடித்த தீவட்டிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே இருசக்கர வாகனத்தில் தப்பிய மற்ற 2 நபர்கள் சேலத்தில் பிடிபட்டனர். அவர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் 3 பேரும் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com