ராமேசுவரம் கோவிலில் இலவச லட்டு வழங்கியதில் ரூ.3½ கோடி மோசடி - 6 பேர் பணியிடை நீக்கம்

ராமேசுவரம் கோவிலில் அரசு உத்தரவுப்படி நாள்தோறும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம் கோவிலில் இலவச லட்டு வழங்கியதில் ரூ.3½ கோடி மோசடி - 6 பேர் பணியிடை நீக்கம்
Published on

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு தினமும் இலவசமாக லட்டு பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இலவச லட்டு வழங்கியதில் பெரும் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் கடந்த சில நாட்களாக தீவிரமாக விசாரணை நடைபெற்றது.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் செல்லத்துரை கூறியதாவது:-

ராமேசுவரம் கோவிலில் அரசு உத்தரவுப்படி நாள்தோறும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் தற்போது வரை 3 ஆண்டுகளில் மட்டும் 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் வழங்கியதில் சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் வரை மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கோவில் பிரசாத பிரிவு பேஸ்கார் பஞ்சமூர்த்தி, பணியாளர் விக்ரம். பிரசாத கடையில் பணியாற்றிய சிவனேஸ்வரி, விற்பனையாளர் செல்வி, விற்பனை பிரசாத பிரிவு பொறுப்பாளர் லாவண்யா, இலவச லட்டு பிரிவு அம்பிகா ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தற்காலிக பணியாளர்கள் பிரபு ரவி, நித்தியானந்தம், பாலாஜி ஆகிய 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த மோசடி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com