திருத்தணி முருகன் கோவில் சரவணப்பொய்கை குளத்தில் துர்நாற்றம்: குளத்தில் இறங்க அஞ்சும் பக்தர்கள்!

திருத்தணி முருகன் கோயில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சரவணப்பொய்கை குளத்தில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அந்த குளத்தில் நீராடுவதை தவிர்த்துள்ளனர்.
திருத்தணி முருகன் கோவில் சரவணப்பொய்கை குளத்தில் துர்நாற்றம்: குளத்தில் இறங்க அஞ்சும் பக்தர்கள்!
Published on

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலின் அடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை குளம் முற்றிலும் மாசடைந்துள்ளது. குளத்தில் உள்ள தண்ணீரைத் தூய்மை படுத்த எந்த விதமான அமைப்பும் செயல்படாதலால் தண்ணீர் பாசடைந்து, துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், மொட்டை அடித்த பிறகு சரவணப்பொய்கை குளத்தில் குளிப்பது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் துர்நாற்றம் மற்றும் பாசி படர்ந்து இருப்பதால் குளத்திற்கு வருவதற்கே பக்தர்கள் அஞ்சுகின்றனர்.

மேலும் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் தனியார் திருமண மண்டபங்களிலும், தங்கும் வசதிகளிலும் கட்டணம் செலுத்தி குளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சரவணப்பொய்கை குளம் இந்து புராணங்களின்படி 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் இக்குளத்தைச் சுற்றி 27 படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இந்தக் குளத்து நீரில் கந்தகம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால், இதற்கு மருத்துவக் குணம் உண்டு என்ற தீவிர நம்பிக்கையும் பக்தர்களிடம் உள்ளது.

அத்தகைய புனிதமான குளம் தற்போது பாழடைந்து கிடப்பது பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இக்குளத்தைத் தூர்வார கோவில் நிதியிலிருந்து ₹22 லட்சத்திற்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. ஆனால் அதனைத் தொடர்ந்து பராமரிக்கத் தவறியதே தற்போதைய நிலைக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதில் இந்து சமய அறநிலையத்துறை உடனடியாகக் தலையிட்டு, சரவணப்பொய்கை குளத்தில் உள்ள அசுத்தமான தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளத்தைத் தூர்வாரி, புதிய நீரை நிரப்பி, தொடர்ந்து தூய்மையாகப் பராமரிக்க நிரந்தரக் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com