

தேனி மாவட்டத்தில் கோடைமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டது. விவசாய தேவைக்கு மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியபோதும் தீவிரமடையாததால் மேற்கு தொடர்ச்சி மலையில் மலைப்பொழிவு மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயராமல் முதல் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. ஆனால் தற்போது மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக வருசநாடு, வெள்ளிமலை, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மூலவைகை ஆறு முற்றிலும் வறண்டு மலை கிராம மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே போல் மேகமலை அருவி, கும்பக்கரை அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
முல்லைப்பெரியாற்றில் மட்டும் தண்ணீர் ஓரளவு செல்கிறது. கொட்டக்குடி ஆறு, வராகநதி உள்ளிட்ட முக்கிய ஆறுகள் வறண்டு மணல்மேடுகளாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 31.73 அடியாக உள்ளது. 226 கன அடி நீர் வருகிற நிலையில் குடிநீர் திட்டங்களுக்காக 86 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 443 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.45 அடியாக உள்ளது. 170 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.60 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.80 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.