

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ரவி, தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு அடிப்படையில் சில தகவல்களை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பில் மாறுபட்ட கருத்துகளை சொல்லி வருகிறார்கள். சில நேரங்களில் சரியாக இருக்கும். பல நேரங்களில் அது தவறாக இருக்கும். நான் ஒரு பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தினேன்.
234 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் தலா 10 பேரை நியமித்தோம். அதாவது 2,340 பேர். ஒவ்வொரு தொகுதியிலும் அவர்கள் ஒவ்வொருவரும் 100 பேரை பல்வேறு தரப்பில் சந்தித்தார்கள். அந்தவகையில் 2,34,000 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அவ்வாறு பெறப்பட்ட கணிப்புகளை ஏ.ஐ. உள்ளிட்ட பல்வேறு விதமான ஆய்வுகளுக்கு பிறகு, த.வெ.க.வுக்கு 41 சதவீதம் பேர் வாக்களித்து இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.
திராவிட கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் பலர் 'விசில்' சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர். அவர்களிடம் ஏனென்று கேட்டால், குழந்தைகள், பேரக்குழந்தைகள் 'விசில்' சின்னத்துக்கு ஓட்டு போடவில்லை என்றால் வீட்டுக்கு வர மாட்டேன் என சொன்னார்கள். அதனால் போட்டோம் என சொல்கிறார்கள். இது ஆச்சரியமான தகவல்.
மொத்தத்தில் த.வெ.க.வுக்கு இந்த தேர்தலில் 121 இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையேயான இழுபறியாக இருக்கும்.
புள்ளிவிவரங்களின் அடிப்படையிலான முடிவுதான் இது. தமிழ்நாட்டில் தனியாகவே ஆட்சி அமைக்கும் நிலையில் த.வெ.க. இருக்கிறது. 4-ந்தேதி (அதாவது நாளை) தேர்தல் முடிவில் இதை பார்க்கலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறினார்.