

திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தொடர்வது கவலை அளிக்கிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம், மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
ஒரு குழந்தையை இப்படி படுகொலை செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
கடந்த திமுக ஆட்சியில் நிலவிய அதே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.
பதவியேற்பு வைபவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய் அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான தீவிரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய சூழலில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.