‘தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு குற்றங்களில் வட மாநிலத்தவர்களின் தொடர்பு அதிகரித்துள்ளது’ - அண்ணாமலை

பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா?
‘தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு குற்றங்களில் வட மாநிலத்தவர்களின் தொடர்பு அதிகரித்துள்ளது’ - அண்ணாமலை
Published on

பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள் அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது தமிழ்நாடு அரசிடமோ இருக்கிறதா? என ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.

இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.

இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு,

சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழ்நாடு அரசு?

பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை.

ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழ்நாடு அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?

தமிழ்நாடு அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என,

அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழ்நாடு அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com