காதலித்து ஏமாற்றிய காதலன்: ‘பெண் தரப்பினரை தாக்கிய காவலர்மீது நடவடிக்கை உறுதி’ - வழக்கறிஞர் பேட்டி

ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பரம், இளம்பெண்ணின் ஆதரவாளர்களை ஒருமையில் பேசியதுடன், அவருடன் வந்த அக்பர் அலி என்பவரையும் கடுமையாகத் தாக்கினார்.
காதலித்து ஏமாற்றிய காதலன்:   ‘பெண் தரப்பினரை தாக்கிய காவலர்மீது நடவடிக்கை உறுதி’ - வழக்கறிஞர் பேட்டி
Published on

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ரம்ஜான் திருமண மண்டபத்திற்குள் சமூக ஆர்வலர்களுடன் புகுந்த இளம்பெண் ஒருவர், அங்கு நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்த வலியுறுத்தி கையில் பதாகைகளுடன் நீதி வேண்டும் என்று போராடிய சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் வடபழனியில் உள்ள மால் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரும், சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்ற இளைஞரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சையது இப்ராஹிமுக்காக இளம்பெண் மதமும் மாறியுள்ளார். இந்த நிலையில் தான், சையது இப்ராஹிமுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ராயபுரத்தில் திருமண ஏற்பாடு நடந்தது. இதனை அறிந்த மதம் மாறிய காதலி, தன் காதலன் தன்னை ஏமாற்றியதை தாங்கிக்கொள்ள முடியாமல், இப்ராஹிமின் திருமணத்தை தடுத்து நிறுத்த சமூக ஆர்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் திருமண மண்டபத்திற்கு சென்று நீதி வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும், ஆர்ப்பாட்ட தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராயபுரம் காவல் ஆய்வாளர் சிதம்பரம், இளம்பெண்ணின் ஆதரவாளர்களை ஒருமையில் பேசியதுடன், அவருடன் வந்த அக்பர் அலி என்பவரையும் கடுமையாகத் தாக்கி வெளியேற்றினார்.

மேலும் சமூக ஆர்வலர் வளர்மதி என்பவரை இன்ஸ்பெக்டர், வாடி போடி என்று பேசினார். இதனால் ஆதங்கத்தடன் பேசிய சமூக ஆர்வலர் வளர்மதி, இன்ஸ்பெக்டரை, உன் யூனிஃபார்மை கழற்றிவிடுவேன் என்று மிரட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து காதலனிடம் ஏமாந்த இளம்பெண்ணுக்கு ஆதரவாக ராயபுரம் தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்றார்.

இன்ஸ்பெக்டர் சிதம்பரத்திடம், ஒரு பெண்ணை இப்படியா ஆபாசமாக பேசுவீர்கள்? பொதுமக்களை அடிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என கேள்வி எழுப்பினார். மேலும் மணமகன் வீட்டாரிடம் காசு வாங்கிவிட்டீர்கள் என்றும் குற்றம்சாட்டினார். இதனால் தவெக எம்எல்ஏக்கும், இன்ஸ்பெக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இவ்வளவு களேபரங்களுக்கு இடையே சையது இப்ராஹிம், தான் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமின் பெற்றுக்கொண்டு வேறு ஒரு இடத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து, சையது இப்ராஹிம் தன்னை ஏமாற்றிவிட்டதாக மதம் மாறிய அந்த இளம்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சையது இப்ராஹிமின் தாய் மாமா, சகோதரர் மற்றும் சையது இப்ராஹிமுக்கு பெண் கொடுத்த திருமண வீட்டார் மீது புகார் கொடுத்துள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தில் மோசமாக நடந்துகொண்ட இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் மாவட்ட காவல்துறை உதவி ஆணையர் தலைமையில், நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆணையர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக இளம்பெண்ணின் வழக்கறிஞர் மாலைமலரிடம் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com