தஞ்சை மாவட்டத்தில் மழையால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் - விவசாயிகள் வேதனை!

முறையான தார்ப்பாய்கள் இல்லாததால் திறந்தவெளி கிடங்கில் தேங்கிய மழைநீர்!
Thanjavur Rain Damage
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்மழையில் நனைந்த நெல் மூட்டைகள்
Published on

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியில் நேற்று திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த கனமழை, தொடர்ந்து 3 மணிநேரமாக பெய்துள்ளது.

இதனால் திறந்தவெளியில் பாதுகாப்பற்ற முறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50,000 நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்துள்ளன.

அந்த பகுதியில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தற்காலிகமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

தீடிரென மழைபெய்ததில் திறந்தவெளியில் இருந்த நெல் மூட்டைகளை மூடிப் பாதுகாப்பதற்குத் தேவையான போதிய தார்ப்பாய்கள் அங்கு இல்லை என்ற காரணத்தால் அடுக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் மழை நீர் புகுந்து முழுமையாக நனைந்து சேதமடைந்தன.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்காமல், பல மாதங்களாக ஒரே இடத்தில் அலட்சியமாகத் தேக்கி வைத்ததே இந்த இழப்பிற்குக் காரணம் என்று விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கை..

தற்போது நனைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக உலர வைக்கவோ அல்லது நவீன உலர் கலன்களுக்கு மாற்றவோ தவறினால், நெல் மணிகள் அனைத்தும் முளைக்கத் தொடங்கி முற்றிலும் பயன்பாடற்றுப் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளின் ரத்தமும் வியர்வையும் கலந்த உழைப்பு கண் முன்னே வீணாவதைத் தடுக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு நனைந்த நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்டா பகுதி விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com