

சென்னை:
சென்னையில் முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில், மெட்ரோ ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 ‘ஏசி’ மினி மின்சார பஸ்களை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், தற்போது 700-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், தினமும் 3,885 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக, தினமும் 34 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இருப்பினும், ரெயில், மெட்ரோ மற்றும் பஸ் நிலையங்களில் இருந்து குடியிருப்புகள், அலுவலகங்கள், நிறுவனங்களை இணைக்கும் வகையில், போதிய அளவில் இணைப்பு பஸ்கள் இல்லை. இதனால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தனியார் பங்களிப்போடு, 300 ‘ஏசி’ மினி மின்சார பஸ்களை இயக்கும் வகையில் டெண்டர் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், பயணிகள் வந்து செல்ல வசதியாக, இணைப்பு வாகன வசதி முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில், தனியார் பங்களிப்போடு, 300 ‘ஏசி’மினி மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 7 மீட்டர் தாழ்தள மின்சார ‘ஏசி’ சிற்றுந்துகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு, அதனுடன் தொடர்புடைய மின்சாரம் மற்றும் உள் கட்டமைப்பு பணிகளை, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களே ஏற்கும். ஒவ்வொரு 7 மீட்டர் ‘ஏசி’ தாழ்தள மினி மின்சார பஸ், மாதத்துக்கு 4,800 கி.மீ., உறுதியுடன் இயக்க வேண்டும். இந்த புதிய ‘ஏசி’ பஸ்களில், பயணிகளிடம் எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது. ஏற்கனவே உள்ள கட்டண முறையே தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.