டெண்டர் முறைகேடு புகார்: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

அதிகாரிகள் தரப்பில் அவசர பணிகளுக்கு இதுபோன்று டெண்டர் விடப்படுவது வழக்கம்தான் என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
டெண்டர் முறைகேடு புகார்: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
Published on

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கோனேரிகுப்பம் ஊராட்சி காரப்பேட்டை கிராமத்தில் ரூ.16.83 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளை முடிப்பதற்காக ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்பட்டது.

நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 3 மணிக்கு 6 மணி நேரத்தில் டெண்டர் முடிவடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆன்லைன் டெண்டர் நடைமுறை சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியது. 6 மணி நேரத்தில் டெண்டர் முடிவடைந்தது எப்படி என்று சமூக வலைதளங்களில் பல்வேறு கண்டனங்கள் பதிவானது.

பொதுவாக டெண்டருக்கு ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் கால அளவு தேவை. இந்த குறுகிய காலத்தில் டெண்டர் முடிவடைந்ததாக கூறுவது எப்படி என்ற கேள்விகள் எழுந்தன. குறிப்பிட்ட ஒரு நபருக்கு மட்டுமே இந்த டெண்டர் போய் சேர வேண்டும் என்ற உள்நோக்கத்தில் அதிகாரிகள் நடந்து கொண்டதாக புகார்கள் கூறப்பட்டன.

ஆனால் அதிகாரிகள் தரப்பில் அவசர பணிகளுக்கு இதுபோன்று டெண்டர் விடப்படுவது வழக்கம்தான் என்று விளக்கம் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் இ டெண்டர்களை இதுபோன்று குறுகிய காலத்தில் திறக்கப்படுவது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த விவரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் என்.ஆனந்துக்கு தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர் உரிய விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் விஜய் உத்தரவின்பேரில் அதிகாரிகள் சாந்தி, கயல்விழி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com