குளுகுளு பிரதேசத்தில் வெயில் கொளுத்துகிறது: ஊட்டியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு 29 டிகிரி வெப்பநிலை பதிவு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், அங்கு நிலவும் குளுகுளு காலநிலை மேலும் பாதிக்கப்பட்டு, சுற்றுலா துறைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
குளுகுளு பிரதேசத்தில் வெயில் கொளுத்துகிறது: ஊட்டியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு 29 டிகிரி வெப்பநிலை பதிவு
Published on

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி நகரத்தில் தற்போது சமவெளிக்கு இணையாக வெப்பநிலை அனலாக கொதித்து வருகிறது. இதனால் அந்த குளுகுளு பிரதேசம் தற்போது இயல்பான குளிர்ச்சியை இழந்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஊட்டியில் கடந்த சில நாட்களாக அதிகபட்ச வெப்பநிலையாக 26 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகிறது. இதனால் அங்கு இதமான காலநிலையை எதிர்பார்த்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

ஊட்டியில் நேற்று 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இது கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு காணப்படும் அதிகபட்ச வெப்பநிலையாக கருதப்படுகிறது. அங்கு பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் 14- 17 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து சற்றே குளிர்ச்சியான நிலை உள்ளது.

கோடை சீசனை முன்னிட்டு தயாராகும் மலர்க்காட்சிகள், குளிர்ந்த காலநிலையை மையமாக கொண்டவை என்பதால் அங்கு தற்போது கோடை சீசனுக்கு தயாரான பல லட்சம் மலர்ச்செடிகள் வாடிவிடும் அபாயம் உள்ளது. இதனால் உள்ளூர் சுற்றுலா தொழிலாளிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே தமிழகத்தில் ஈரோடு, கோவை உள்பட 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தெற்கு அசாம் முதல் தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிஷா, சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் உள்கர்நாடகா வழியாக காற்றழுத்த தாழ்வுபாதை நிலவுகிறது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்ட கடலோர பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் வருகிற 20-ந்தேதி வரை லோன மழை பெய்யக்கூடும். இருப்பினும் உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வருகிற 18-ந்தேதி வரை உயரக்கூடும்.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்திவேலூரில் 105.44 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும் வேலூர்-104.36, தருமபுரி-103.1, ஈரோடு, சேலம், மதுரை விமான நிலையம்- தலா 102.2, கோவை-101.84, நாமக்கல்-101.3, திருப்பதூர்.100.4, மதுரை நகர், பாளையங்கோட்டை, திருச்சி- தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஊட்டியின் வெப்பநிலை உயர்வுக்கு மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவது, கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் கட்டிடங்கள், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை காரணமாக உள்ளன. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கோடைமழையின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.

எல்நினோ போன்ற இயற்கை காலநிலை நிகழ்வுகளும் ஊட்டியின் வெப்பநிலை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், அங்கு நிலவும் குளுகுளு காலநிலை மேலும் பாதிக்கப்பட்டு, சுற்றுலா துறைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

எனவே மரங்களை பாதுகாப்பது, கட்டிட வளர்ச்சியை கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவது ஆகியவை அவசியம் என்று வானியல் நிபுணர்கள் கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com