

மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது தொடர்பாக எழும் முறைகேட்டு சிக்கலுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையாகவும், சில்லறை தட்டுபாட்டை கட்டுப்படுத்தவும் மதுபானக் கடைகளில் பாட்டிலைத் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரத்தை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக இன்று சென்னை எழும்பூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சோதனை முறையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களின் காலி மதுபாட்டிலை எடுத்து வந்து, அதில் ஒட்டப்பட்டுள்ள லேபிளை இந்த இயந்திரத்தின் முன் காட்டி முதலில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
லேபிளை வெற்றிகரமாக ஸ்கேன் செய்த பிறகு பாட்டிலை இயந்திரத்தின் உள்ளே போட்டால், அதற்கான 10 ரூபாய் ஊக்கத்தொகை உடனடியாக நுகர்வோருக்குத் தானியங்கி இயந்திரம் மூலமாகவே டிஜிட்டல் ரீஃபண்டாகக் கிடைக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூரில் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திட்டத்தை மிக விரைவில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளன.