

கன்னியாகுமரி:
புத்தாண்டு தினத்தையொட்டி இன்று முதல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும் இன்று முதல் 2-ந்தேதி வரை 3 நாட்கள் தொடர்ந்து படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாத வகையில் கன்னியாகுமரி பழைய பஸ் நிலையரவுண்டானா சந்திப்பு பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி கன்னியாகுமரியில் உள்ள சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லாதவகையில் நான்கு வழிசாலை முடியும் ஜீரோ பாயிண்ட் பகுதியில்உள்ள சிலுவை நகரில் இருந்து கடற்கரை பகுதிக்கு செல்லும் சாலைகளிலும் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வடக்கு நுழைவு வாசல் அருகில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பாதையும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள கடைகள் மட்டும் மூடப்பட்டு இருந்தன.
ஆனால் தடையை மீறி இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியை காண கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத்துறை அருகில் உள்ள வாவத்துறை கடற்கரை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் இந்த தடைகளை மீறி கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதிக்குச் சென்ற சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து விரட்டியடித்தனர். இதனால் எப்போதும் மக்கள் கூட்டத்தினால் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரியில் முக்கடல் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன.
கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் ஆகியவற்றுக்கு இன்று காலை வழக்கம்போல் பக்தர்கள் சென்று வழிபட்டு வந்தனர்.