குவாட்டருக்கு ஆசைபட்ட டெய்லரை அடகு வைத்த கில்லாடி திருடன்

வங்கி கணக்கில் இருந்து பணம் மும்பை ஏ.டி.எம். கார்டை வைத்து எடுத்தது தெரிய வந்தது.சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குவாட்டருக்கு ஆசைபட்ட டெய்லரை அடகு வைத்த கில்லாடி திருடன்
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த வாலூரை சேர்ந்தவர் தசரதன் (வயது 35). இவர் வெலக்கல் நத்தம் பகுதியில் செல்போன் சர்வீஸ் மற்றும் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் ஜெயபால் (47). டெய்லர். இவரும், வாலிபர் ஒருவரும் தசரதன் செல்போன் கடைக்கு பைக்கில் வந்தனர்.

அப்போது தசரதனிடம் வாலிபர் தனக்கு அவசரமாக ரூ.20 ஆயிரத்தை கூகுள் பே அல்லது ஜி பேயில் அனுப்புமாறும் கையில் பணத்தை தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய தசரதன் ஆன்லைன் மூலம் ரூ.20 ஆயிரத்தை வாலிபர் சொன்ன எண்ணுக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் பணத்தை தசரதன் கேட்டார். அதற்கு அந்த வாலிபர் அருகே உள்ள ஏ.டி.எம்-மிற்கு சென்று பணத்தை எடுத்து வந்து தருவதாக கூறினார். இதனால் ஜெயபாலை செல்போன் கடையில் அமர வைத்துவிட்டு வாலிபர் பணத்தை எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றார்.

வெகு நேரமாகியும் வாலிபர் வராததால் ஜெயபால், நான் சென்று பார்த்து வருகிறேன் என்று தசரதனிடம் கூறிவிட்டு சிறிது தூரம் சென்றார். சந்தேகம் அடைந்த தசரதன் கத்தி கூச்சலிட்டார். அப்போது அங்கிருந்து ஓட்டம் பிடித்த ஜெயபாலை அருகே இருந்த வியாபாரிகள் விரட்டி பிடித்தனர்.

பின்னர் ஜெயபாலிடம் விசாரித்தபோது, தன்னுடன் வந்த வாலிபர் யார் என்பது எனக்கும் தெரியாது. நான் மது குடிக்க வந்தேன். அங்குதான் அந்த வாலிபரை சந்தித்தேன்.

மேலும் அந்த வாலிபர் எனக்கு ஒரு குவாட்டர் வாங்கி தருகிறேன் என்று கூறி என்னுடன் வாருங்கள் என்று இங்கே அழைத்து வந்தார். நானும் மது பழக்கத்தால் குவாட்டருக்கு ஆசைப்பட்டு வந்தேன். என்னை அடகு வைத்து மாட்டி விட்டு சென்றுவிட்டார் என்று புலம்பினார்.

தசரதன் உடனடியாக வங்கிக்கு சென்று வாலிபர் கொடுத்த செல்போன் நம்பரை வைத்து வங்கி கணக்கை பரிசோதித்து பார்த்தார். அப்போது வங்கி கணக்கில் இருந்து பணம் மும்பை ஏ.டி.எம். கார்டை வைத்து எடுத்தது தெரிய வந்தது.

ஜெயபாலை நாட்டறம் பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். டெய்லரை அடகு வைத்த கில்லாடி திருடனை தேடி வருகின்றனர்.

சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com