பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1.30 கோடி நகை-பணம் கொள்ளை

கொள்ளை சம்பவம் தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்களிடம் முதல் கட்டமாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகை தடயங்கள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கொள்ளை நடந்த பெண் இன்ஸ்பெக்டர் வீட்டை படத்தில் காணலாம்.
கொள்ளை நடந்த பெண் இன்ஸ்பெக்டர் வீட்டை படத்தில் காணலாம்.
Published on

மதுரை:

மதுரையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டை உடைத்து 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை அள்ளி சென்ற மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த துணிகர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சிநகரை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 46). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் மதுரை பாசிங்காபுரத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்ற ஷர்மிளா நேற்று இரவு வீடு திரும்பி உள்ளார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

பீரோவில் வைக்கப்பட்டிருந்த 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் ரொக்கம் மதிப்பு ரூ.1.30 கோடி ஆகும். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பெண் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்களிடம் முதல் கட்டமாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட கைரேகை தடயங்கள் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com