சுவரில் துளைபோட்டு நகை கடையில் கொள்ளை முயற்சி- வடமாநில கும்பல் கைவரிசையா?

சத்தியமங்கலத்தில் இன்று அதிகாலை சுவரில் துளைபோட்டு நகை கடையில் 3 வாலிபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகை கடையின் சுவரில் துளை போடப்பட்ட பகுதி அடைக்கப்பட்டிருந்தது
நகை கடையின் சுவரில் துளை போடப்பட்ட பகுதி அடைக்கப்பட்டிருந்தது
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் சாலையில் ஏராளமான நகை கடைகள், துணி கடைகள் செயல்பட்டு வருகின்றன. எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த சாலையில் ஆள் நடமாட்டமும் அதிக அளவில் இருக்கும்.

இந்த பகுதியில் பத்ரிநாதன் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இந்த கடையில் வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையின் உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்றார்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் 3 வாலிபர்கள் நகை கடையில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு வந்துள்ளனர். அவர்கள் நகை கடையின் பக்கவாட்டு சுவரில் டிரில்லர் மூலம் துளை போட்டு கொண்டிருந்தனர்.

டிரில்லர் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது நகை கடையில் 3 வாலிபர்கள் துளை போட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் திருடன் திருடன் என சத்தம் போட்டனர்.

இதையடுத்து மர்ம நபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் இதுகுறித்து நகை கடையின் உரிமையாளர் பத்ரிநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மேலும் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது நகை கடையின் பக்கவாட்டு சுவரில் ஒரு ஆள் உள்ளே செல்லும் அளவுக்கு துளை போடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வெளியே வந்ததால் நகை கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பியது தெரிய வந்தது.

மேலும் கொள்ளை முயற்சி நடந்த நகை கடையில் காவலாளி நியமிக்கப்படவில்லை. ஆனால் கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த கேமராக்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது 3 வாலிபர்கள் கொள்ளையடிக்க வந்தது பதிவாகி இருந்தது. மேலும் அவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

கொள்ளை முயற்சி நடந்த நகை கடைக்கு துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

போலீசார் அந்த பகுதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி கொள்ளையர்கள் எந்த வழியாக தப்பி சென்றனர் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com