

சென்னை:
திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலையில் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பறக்கும் ரெயில் நிலையத்தில் அதிகாலையில் பணியில் இருந்த ஊழியர் டீக்காராம் மீனா பூட்டிய அறையில் கட்டிப்போடப்பட்ட நிலையில் இருந்தார்.
காலை நேரத்தில் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் அளித்த தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்த அறையை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டனர்.
அப்போது டீக்காராம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “என்னை முகமூடி அணிந்த 3 பேர் துப்பாக்கியை காட்டி மிரட்டி மேஜை டிராயரில் இருந்த பணம் ரூ.1.32 லட்சத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டதாகவும், என்னை அவர்கள்தான் கட்டிப் போட்டனர்” என்றும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
நேற்று காலையில் இந்த சம்பவம் ரெயில்வே போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர் போலீஸ் அதிகாரிகளும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். டி.ஐ.ஜி. ஜெயகவுரி, போலீஸ் சூப்பிரண்டு அதி வீரபாண்டியன் ஆகியோரும் நேரடி விசாரணையில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இருப்பினும் போலீசாருக்கு ரெயில்வே ஊழியர் டீக்காராம் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
இதுபோன்ற மர்மமான கொள்ளை சம்பவங்களின்போது போலீசார் பாதிக்கப்பட்ட நபர்களிடம் பல விதங்களில் கேள்விகள் எழுப்பி விசாரணை நடத்துவது வழக்கம். அதுபோன்ற டீக்காராமிடமும் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின்போது டீக்காராம் பல நேரங்களில் திருட்டு முழி முழித்துள்ளார்.
தற்போது அனைத்து விதமான குற்ற சம்பவங்களிலும் துப்பு துலக்குவதற்கு கேமராக்களே பெரிதும் உதவுகின்றன. 3-வது கண் போல இருக்கும் இந்த கேமராக்களையும் போலீசார் போட்டு பார்த்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை சம்பவம் நடைபெற்ற டிக்கெட் கவுண்டர் அலுவலகத்துக்குள் எந்த கேமராவும் இல்லை. ரெயில் நிலைய வளாகத்திலும் கேமராக்கள் இல்லை.
இருப்பினும் போலீசார் ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஓ.எம்.ஆர். சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமரா ஒன்றில் பெண் ஒருவர் நடந்து செல்வது பதிவாகி இருந்தது.
ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள மற்ற கேமராவிலும் அதே பெண் உருவம் பதிவாகி இருந்தது. அவர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தியபோது டீக்காராமின் மனைவி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் பிடியில் இருந்த டீக்காராமிடம், உங்கள் மனைவி இங்கு வந்து சென்றது ஏன்? அதை ஏன் எங்களிடம் சொல்லவில்லை” என்று கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளிக்க முடியாமல் டீக்காராம் திணறினார். இதையடுத்தே துப்பாக்கி முனையில் கொள்ளை நடைபெற்றதாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு குட்டு வெளிப்பட்டது.
ரெயில்வே ஊழியரான டீக்காராம் திட்டமிட்டே தனது மனைவி சரஸ்வதியை வைத்து இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றிய திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. போலீஸ் பிடி இறுகியதால் டீக்காராம் நடந்த சம்பவங்களை அப்படியே போலீசாரிடம் கக்கினார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து விட்டதாவும், அதில் இருந்து மீள வழி தெரியாமல் தவித்ததாகவும் கூறிய டீக்காராம் நான்தான் மனைவியை வரவழைத்து என்னை கட்டி போட சொன்னேன். அதன்படி அவளும் அதிகாலையில் வந்து என்னை கட்டிப்போட்டார்.
அதற்கு முன்னதாக நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி டிக்கெட் கவுண்டரில் இருந்த ரூ.1.32 லட்சத்தை ஒரு பையில் போட்டு மனைவியிடம் கொடுத்தேன். அதோடு எனது செல்போனையும் சுவிட்ச்ஆப் செய்து அவளி டம் கொடுத்தேன்.
இந்த பணத்தையும், செல்போனையும் எடுத்து செல்லும்போது அறையை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு செல்லும்படி கூறினேன். இதன்படி பூட்டி விட்டு சாவியையும் அவர் எடுத்து சென்று விட்டு விட்டார். தெரியாமல் இதுபோன்று செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என போலீசாரிடம் டீக்காராம் கதறினார்.
நேற்று காலையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரித்த தனிப்படை போலீசார் இரவிலும் அதனை தீவிரப்படுத்தி இருந்தனர். இதன் விளைவாகவே துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் துப்பு துலங்கி உள்ளது. இதன் பிறகே ரெயில்வே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதைத் தொடர்ந்து ஏற்கனவே போலீஸ் பிடியில் இருந்த டீக்காராம் கைது செய்யப்பட்டார். டிக்கெட் கவுண்டரில் எடுத்து செல்லப்பட்ட பணத்துடன் ஊரப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு சென்று எதுவும் தெரியாதது போல் இருந்த டீக்காராமின் மனைவி சரஸ்வதியையும் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து கொள்ளைபோனதாக கூறப்பட்ட ரூ.1.32 லட்சம் பணமும் அப்படியே பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையர்கள் எடுத்து சென்றதாக கூறி மனைவியிடம் கொடுத்து அனுப்பி இருந்த டீக்காராமின் செல்போனையும் போலீசார் கைப்பற்றினர்.
இதன் மூலம் திருவான்மியூர் கொள்ளை சம்பவத்தில் ஏற்பட்டிருந்த பரபரப்பு 24 மணி நேரத்தில் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் உரிய முறையில் விசாரணை நடத்தி ஒரே நாளில் துப்பு துலக்கி கொள்ளை சம்பவம் நாடகம் என்பதை வெளிக்கொண்டு வந்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். அவர்களுக்கு வெகுமதியும் வழங்கப்பட உள்ளது.
கொள்ளை நாடகம் ஆடிய டீக்காராம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.