குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த பெண்ணை உல்லாசத்துக்கு மறுத்ததால் தீர்த்துக்கட்டிய பூசாரி

கடந்த 15-ந்தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை. போலீசார் பூசாரி குமார், அவரது கூட்டாளி மோகன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த பெண்ணை உல்லாசத்துக்கு மறுத்ததால் தீர்த்துக்கட்டிய பூசாரி
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர் பட்டி கிராமம் சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (38). இவர் பெங்களூரில் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி (28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த ஓராண்டாக செல்வி குழந்தை பேறுக்காக மருத்துவம் பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது கணவர் பசவராஜ் அக்கம், பக்கத்தில் விசாரித்து பார்த்தார். ஆனாலும் அவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து அவர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே சேலம் சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி அருகே உள்ள பெருமாம்பட்டி பாறைக்காட்டூர் என்ற பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் முட்புதரில் ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த பெண் மாயமான செல்வி என்று தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தெரியவந்ததும் தாரமங்கலம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது திருமலைகிரி பெருமாம்பட்டியை சேர்ந்த குமார் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 25 ஆண்டுகளாக தனது தோட்டத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வைத்து வழிபட்டு வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக செல்வி குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது செல்வி பூசாரி என்ற முறையில் குமாரிடம் பேசி பழகி உள்ளார்.

அதே போல் சம்பவத்தன்றும் செல்வி வழக்கம் போல் கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது பூசாரி குமார், செல்வியை உல்லாசத்துக்கு அழைத்து உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து செல்வி மறுத்து விட்டார். இதுப்பற்றி வெளியே சொன்னால் அவமானப்பட்டு விடுவோம் என்று கருதி செல்வியை கொலைசெய்ய முடிவு செய்தார். அதன்படி குளிர்பானத்தில் சயனைடு கலந்து செல்விக்கு கொடுத்து உள்ளார். இதை வாங்கி குடித்த செல்வி சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து இறந்து விட்டார். பின்னர் அவரது உடலை அருகில் உள்ள முட்புதரில் தூக்கி வீசியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பூசாரி குமார், அவரது கூட்டாளி மோகன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com