

தஞ்சாவூர்:
தமிழகம் முழுவதும் இன்று நகராட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், 7 பேரூராட்சிகளுக்கும் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவிதா பாண்டியன் அறிவிக்கப்பட்டார்.
துணைத் தலைவருக்கான பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்து திமுக தலைமைக் கழகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
அதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழுவை சேர்ந்த திருத்துறைப் பூண்டி நகராட்சி துணைத் தலைவர் வேட்பாளராக ராமலோகஈஸ்வரி என்பவரை அறிவித்திருந்தது. இவர் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ரகுராமன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் உள்ள வேட்பாளர் ராமலோகஈஸ்வரி வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு உடனடியாக தப்பி சென்றுள்ளனர்.
சத்தம் கேட்டு வெளியில் வந்த ரகுராமன், ராமலோக ஈஸ்வரி வீட்டின் முன்பு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி போலீசில் இதுபற்றி புகார் அளித்துள்ளனர்.
இதன்பேரில் டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் தீப்பற்றி எரிந்த வீட்டில் சிறுசிறு கண்ணாடி துகள்கள் சிதறிக் கிடப்பது தெரியவந்தது. வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி நடந்ததா? அல்லது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்களா என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி ராம லோகஈஸ்வரியின் கணவர் ரகுராமன் கூறுகையில், எனது மனைவியை நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு அறிவித்ததில் இருந்து எதிர்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் எனது மனைவியை கொலை செய்யும் நோக்கில் நடந்ததாகவே தெரிகிறது. எனவே போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றார்.
திருத்துறைபூண்டி நகாட்சி துணைத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் அறிவித்திருந்த நிலையில் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.