திருமணம் ஆகாமல் கர்ப்பம்- குழந்தையின் காலை வெட்டி எடுத்து தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்சு

குழந்தையை கொன்றதற்கான சாத்திய கூறுகள் தான் அதிகமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.குழந்தையை கொன்றது உறுதி செய்யப்பட்டால் தற்போதைய வழக்கு பிரிவுகள் மாற்றப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்படும்.
திருமணம் ஆகாமல் கர்ப்பம்- குழந்தையின் காலை வெட்டி எடுத்து தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்சு
Published on

போரூர்:

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் நர்சாக சென்னை தி.நகரில் உள்ள டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்த்து வருகிறார்.

இவர் உடன் வேலை பார்க்கும் மேலும் 2 நர்சுகளுடன் சவுத்போக் சாலையில் உள்ள அறையில் தங்கி கடந்த ஒரு ஆண்டாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சென்னையில் ஐ.டி.கம்பெனியில் பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நர்சுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகியதால் நர்சு கர்ப்பம் அடைந்தார். அவர் கர்ப்பத்தை கலைக்க முயன்றபோது முடியவில்லை. திருமணம் ஆகாமல் கர்ப்பிணியாக இருந்த நர்சு இதுபற்றி உறவினர்கள் யாரிடமும் சொல்லாமல் மறைத்தார்.

7 மாத கர்ப்பிணியாக இருந்த நர்சுக்கு தங்கி உள்ள அறையில் இருந்த போது திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனக்கு தானே கழிவறைக்கு சென்று பிரசவம் பார்த்தார்.

அப்போது பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இரண்டு கால்களையும் தனியாக வெட்டி எடுத்ததாக தெரிகிறது. இதனால் பெண் குழந்தை இறந்து பிறந்தது.

இதற்கிடையே நர்சுக்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு உடன் தங்கி இருந்தவர்கள் வந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக நர்சை மீட்டு இறந்த குழந்தையின் உடலுடன் மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது இறந்த குழந்தையின் ஒரு காலை கழிப்பறையில் போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நர்சுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்து போன குழந்தையின் உடல் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் நர்சு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

நர்சு தனக்கு தானே கழிவறையில் பிரசவம் பார்த்து உள்ளார். வயிற்றில் இருந்து குழந்தை வெளிவந்த போது அவருக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது. குழந்தையின் கால்களை பிடித்து வெளியே இழுத்தபோது சிக்கி வராததால் தான் வைத்திருந்த கத்தியால் குழந்தையின் கால்களை வெட்டி எடுத்து உள்ளார். ஒருகாலை கழிவறை தொட்டியில் வீசி இருக்கிறார். பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு குழந்தையை வெளியில் எடுத்துள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ள நர்சுக்கு எழும்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகே குழந்தை இறந்தே பிறந்ததா? அல்லது உயிருடன் பிறந்த குழந்தையை நர்சு கொலை செய்தாரா? என்பது தெரிய வரும்.

குழந்தையை கொன்றதற்கான சாத்திய கூறுகள் தான் அதிகமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். குழந்தையை கொன்றது உறுதி செய்யப்பட்டால் தற்போதைய வழக்கு பிரிவுகள் மாற்றப்பட்டு கொலை வழக்கு பதிவு செய்யப்படும்.

மேலும் நர்சிடம் நெருங்கி பழகிய வாலிபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com