

திண்டுக்கல்:
திண்டுக்கல் அனுமந்தன்நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தி.மு.க. ஒன்றிய அவைத் தலைவராக உள்ளார். இவரது மகன் பிரபாகரன் (வயது 26). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் தென்றல் தேன்மொழி என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு பிரபாகரன் சிலுவத்தூர் சாலை ஏர்போர்ட் நகரில் உள்ள தனது போலீஸ் நண்பரான சூர்யாவின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றார்.
அவருடன் பிரபாகரனின் நண்பர்களான கார்த்திக், குணசேகரன், வினோத்கண்ணன் ஆகியோரும் சென்றனர். நண்பருடன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றபோது, திடீரென அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை கீழே தள்ளி கத்தியால் சரமாரியாக குத்தினர்.
இதைப் பார்த்ததும் அருகில் இருந்த அவரது நண்பர் கார்த்திக் மற்றும் வினோத்கண்ணன் அவர்களை தடுக்க முயன்றனர். இதில் அவர்களுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக மற்ற நண்பர்கள் காயமடைந்த பிரபாகரன் மற்றும் கார்த்திக்கை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி.சீனிவாசன், டி.எஸ்.பி. முருகன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது பெண் பிரச்சினையால் ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், பிரபாகரனுக்கும் யார்? பெரியவர் என்பதில் முன்விரோதம் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட இப்பிரச்சினையில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே நண்பர்கள் சமரசம் செய்து வைத்துள்ளனர். எனவே அந்த பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 15 நாளில் புதுமாப்பிள்ளை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.