டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு- சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்து மதுரை ஐகோர்ட் உத்தரவு
மதுரை:
மதுரையை சேர்ந்த வக்கீல் முகமதுரஸ்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்தது. முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறி, 99 பேர் வாழ்நாள் தகுதியிழப்பு செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி.யிடம் டி.என்.பி.எஸ்.சி. புகார் அளித்தது. அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து குரூப்-4 முறைகேடு வழக்கை விசாரிக்க தனிப்படை அமைத்துள்ளது. இந்த தனிப்படையால் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரூப்-4 முறைகேட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. சி.பி.ஐ. விசாரித்தால் தான் முறைகேடு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர முடியும். எனவே எதிர்காலத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங்களை கண்காணிக்க குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.
முறைகேடு செய்து ஏற்கனவே நிரப்பப்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு மறுதேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு உத்தரவிட வேண்டும். குரூப்-4 முறைகேடு குறித்த அனைத்து உண்மைகளையும் கண்டு பிடிக்கவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளிடமும் பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பி இருந்தது. அதற்கு பல்வேறு அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த முறைகேடு தொடர்பாக பலர் கைதாகி உள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்து இருந்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்தனர். அப்போது டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

