

கோவை:
மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.
அதன்படி நேற்று வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் நேற்று 95 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை.
அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை டிரைவர்கள் இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். வழக்கம் போல் பஸ்நிலையத்துக்கு வந்த பயணிகள், அரசு பஸ்கள் இயக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்தனர்.
தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் முண்டியடித்துக்கொண்டு ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பயணிகள் சென்றனர். போராட்டம் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று பஸ்கள் இயக்கப்படாமல் பயணிகள் அவதிப்பட்டதால் இன்று அந்த நிலைமை ஏற்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் எதிரொலியாக இன்று கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் ஓடுகிறது. இதில் 70 சதவீத பஸ்கள் இன்று ஓடின. காலை 6 மணிக்கு அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்த ஊழியர்கள், அங்கிருந்து பஸ்களை வெளியே எடுத்து இயக்கத் தொடங்கினர்.
6 மணி முதலே காந்திபுரம் பஸ்நிலையம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ்நிலையங்களுக்கு பஸ்கள் வரத்தொடங்கின. இதனால் எந்தவித சிரமும் இன்றி பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
இதேபோல பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர் போன்ற புறநகர் பகுதிகளிலும் காலை முதலே அரசு பஸ்கள் ஓடின.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று 76 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளும், வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளும் அவதி அடைந்தனர். அரசு பஸ்கள் ஓடாததால் தனியார் வாகனங்களில் பயணிகள் பயணம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடின. பஸ்கள் ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.