திருப்பூர் அருகே துப்பாக்கி-பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த கஞ்சா கும்பல் கைது

விவசாயிகள் எனக்கூறி பல்லடத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் அருகே துப்பாக்கி-பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த கஞ்சா கும்பல் கைது
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையம் எள்ளுக்காடு தோட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தை சேர்ந்த சபரி, சியாம் என்ற 2 வாலிபர்கள் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வதாக கூறியுள்ளனர். ஆனால் விவசாயம் எதுவும் செய்யவில்லை. பொதுமக்கள் கேட்ட போது தற்போது சீசன் இல்லை, மழை சீசனில் விவசாயம் செய்வதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து அங்குள்ள தோட்டத்து வீட்டில் தங்கி உள்ளனர். அப்போது அருகில் வசிக்கும் சிலருடன் நட்பாக பழகி அவர்களையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளனர். இந்தநிலையில் அந்த கும்பல் மூலம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அனுராதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் துப்பாக்கி, அரிவாள், வாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்த கேரளாவை சேர்ந்த ஹாசிம் (வயது 39), அதே பகுதியை சேர்ந்த விபின் தாஸ்(29) ,சிவகங்கையை சேர்ந்த செல்வ கணபதி(27) , அருள்புரம் நவீன் ஆனந்த் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 5 அரிவாள்,1 துப்பாக்கி. 11 தோட்டாக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 200 கிராம் கஞ்சா, 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 4 பேரையும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைமறைவாக உள்ள சபரி, ஷியாம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் மீது கேரளாவில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. எதிர்தரப்பினர், நீதிமன்றத்தில் வைத்து இவர்களை கொல்ல முயன்றதால் அங்கிருந்து தப்பி, விவசாயிகள் எனக்கூறி பல்லடத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரையும் கஞ்சா விற்பனை செய்வதற்கும், தங்களது பாதுகாப்புக்கும் வைத்துக்கொண்டதுடன் திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். தலைமறைவாக உள்ள 2பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com