நாகர்கோவில் அருகே 2 குழந்தைகளுக்கு தீ வைத்து விட்டு தந்தை தற்கொலை

முதல்கட்ட விசாரணையில் நாகராஜன் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்வது வழக்கம் என்றும் நேற்று குடிபோதையில் அவர் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது.மனைவி வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் குழந்தைகள் மீது தீ வைத்து விட்டு நாகராஜனும் தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட நாகராஜனையும் அஷ்மிகா, தன்ஷிகா மற்றும் அவரது தாயார் அனிதாவையும் படத்தில் காணலாம்.
தற்கொலை செய்து கொண்ட நாகராஜனையும் அஷ்மிகா, தன்ஷிகா மற்றும் அவரது தாயார் அனிதாவையும் படத்தில் காணலாம்.
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான் கடை பரசேரி ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45), எலக்ட்ரீசியன்.

இவரது மனைவி அனிதா (35). இவர்களுக்கு சுஷ்மிகா (12), தன்ஷிகா (10) என்ற மகள்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கடையில் அனிதா வேலை பார்த்து வருகிறார். அவரது மகள்கள் 2 பேரும் பரசேரி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

நேற்று மதியம் அனிதா வழக்கம்போல் வேலைக்கு சென்றார். வீட்டில் சுஷ்மிகாவும், தன்ஷிகாவும் இருந்தனர். கடையில் கூடுதலாக வேலை இருந்ததால் அனிதா இரவு வீட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. நாகராஜனும் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதையடுத்து குழந்தைகள் சாப்பிட்டு விட்டு தூங்கினார்கள். அப்போது நாகராஜன் வீட்டிற்கு வந்தார். குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்த அவர், மனைவி வீட்டில் இல்லாததால் ஆத்திரம் அடைந்தார்.

அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் நிதானம் இழந்து காணப்பட்டார். மனைவி மீதான நாகராஜனின் கோபம், குழந்தைகள் மீது திரும்பியது. தான் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் குடிபோதையில் வீட்டின் பீரோவில் இருந்த துணிகளை எடுத்து குழந்தைகள் மீது வீசி உள்ளார்.

பின்னர் சமையல் அறையில் இருந்த மண்எண்ணையை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றிக் கொண்டார். தொடர்ந்து குழந்தைகள் மீது வீசிய துணிகள் மீதும் மண்எண்ணையை தெளித்து தீயை வைத்தார். துணிகளின் மீது பரவிய தீ குழந்தைகள் மீதும் பிடித்தது. மேலும் நாகராஜனும் தீயில் சிக்கினார்.

இதற்கிடையில் தீயின் வெப்பம் தாங்காமல் குழந்தைகள் சுஷ்மிகா, தன்ஷிகா இருவரும் கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு வீட்டின் அறையில் தீ எரிவதையும் நாகராஜன் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தைகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து, அவர்களை மீட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகளுக்கு தீ வைத்து விட்டு நாகராஜன் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் நாகராஜன் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்வது வழக்கம் என்றும் நேற்று குடிபோதையில் அவர் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது. அப்போது மனைவி வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் குழந்தைகள் மீது தீ வைத்து விட்டு அவரும் தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 குழந்தைகளுக்கு தீ வைத்துவிட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com