தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியுடன் கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கூடுதல் நிதியை 13 பேர் குடும்பத்துக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு
Published on

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் 22.5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 19-10-2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

மேற்படி அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 லட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16-11-2022) உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com