சென்னை பெருங்குடியில் வக்கீல் சரமாரி வெட்டிக்கொலை

ஜெய்கணேசை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.சைதாப்பேட்டை கோர்ட்டில் ஜெய்கணேஷ் பணிபுரிந்து வந்ததால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை பெருங்குடியில் வக்கீல் சரமாரி வெட்டிக்கொலை
Published on

சென்னை:

சென்னை பெருங்குடி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். 33 வயதான இவரது சொந்த ஊர் கோவில்பட்டி ஆகும். திருமணமான ஜெய்கணேஷ், மனைவி முருகேஸ்வரி மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் பெருங்குடியில் வசித்து வந்தார்.

சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக பணி புரிந்து வந்த இவர் நேற்று மாலையில் நண்பர்களுடன் வெளியில் சென்று அதே பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினார்.

பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் வக்கீல் ஜெய்கணேஷ் வீடு திரும்பினார். ராஜீவ் நகர் முதல் மெயின் ரோட்டில் உள்ள தனது வீட்டு அருகே சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் 'திடீர்' தாக்குதலில் ஈடுபட்டது. வக்கீல் ஜெய்கணேசை தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

இதில் நிலை குலைந்த ஜெய்கணேஷ் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார்.

இதையடுத்து உயிருக்கு போராடிய ஜெய்கணேசை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஜெய்கணேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜெய்கணேசின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், நண்பர்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அதிக எண்ணிக்கையில் ஜெய்கணேசின் உறவினர்களும் நண்பர்களும் திரண்டு திடீரென ஆஸ்பத்திரி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்கணேசை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்று உறுதி அளித்தனர். இதன்பிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.

சைதாப்பேட்டை கோர்ட்டில் ஜெய்கணேஷ் பணிபுரிந்து வந்ததால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கொலையாளிகளை பிடிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டு உள்ளனர். கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜீவானந்தம், துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் கொலையாளிகள் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்.இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து ஜெய்கணேசை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜெய்கணேஷ், கிரிக்கெட் விளையாடி விட்டு வீடு திரும்பியபோது அவரை ரவுடிக்கும்பலை சேர்ந்தவர்கள் பின் தொடர்ந்து சென்று திட்டம் போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் ஜெய்கணேஷ் வீட்டுக்கு வந்த வழியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வில்லை. ரவுடிக் கும்பலை சேர்ந்த சிலரே இந்த கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததால் அவர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com