சென்னையில் 10 ஆயிரம் பேர்களை ஏமாற்றி ரூ.800 கோடி மெகா மோசடி- 3 முக்கிய பெண் குற்றவாளிகள் கைது

குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடி கம்பெனியில் இவர்கள் முக்கிய நிர்வாகிகளாக பதவி வகித்தனர்.குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களின் வீடுகள் உள்ளிட்ட 32 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சென்னையில் 10 ஆயிரம் பேர்களை ஏமாற்றி ரூ.800 கோடி மெகா மோசடி- 3 முக்கிய பெண் குற்றவாளிகள் கைது
Published on

சென்னை:

சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும், மாதந்தோறும் வட்டிப்பணம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது.

அதை நம்பி ஏராளமான பேர், அந்த நிறுவனத்தில் முதலீட்டு தொகையை கொண்டு கொட்டினார்கள். ஆனால் அறிவித்தபடி அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வட்டி தொகையை கொடுக்கவில்லை. அசல் தொகைக்கும் பட்டை நாமம் போட்டு விட்டது.

ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் முதல் கட்டமாக 1,500 ஆயிரம் பேர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார்களை குவித்தார்கள். தற்போது 10 ஆயிரம் பேர்களிடம் பணத்தை சுருட்டியது அம்பலமாகி உள்ளது.

மோசடி தொகையும் ரூ.500 கோடியில் இருந்து ரூ.800 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் அலெக்சாண்டர், சவுந்திரராஜன் உள்ளிட்ட 21 பேர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய புள்ளி நேரு (வயது 49) என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களின் வீடுகள் உள்ளிட்ட 32 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியான மணிகண்டன் (51) என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இதர 19 குற்றவாளிகளில் 3 முக்கிய பெண் குற்றவாளிகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களது பெயர் திருவேற்காட்டைச் சேர்ந்த சாந்தி, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கல்யாணி, அண்ணாநகரைச் சேர்ந்த சுஜாதா என்பதாகும். குற்றம் சாட்டப்பட்டுள்ள மோசடி கம்பெனியில் இவர்கள் முக்கிய நிர்வாகிகளாக பதவி வகித்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான இவர்கள் 2,835 பேர்களிடம், ரூ.235 கோடி அளவுக்கு பணத்தை வசூல் செய்து கொடுத்து, மோசடிக்கு முக்கிய ஆணி வேர்களாக செயல்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com