காதலன் வீட்டு முன்பு 9 நாட்களாக சென்னை வங்கி பெண் ஊழியர் தர்ணா - தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு 9 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்ட சென்னை வங்கி பெண் ஊழியர் தற்கொலைக்கு ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோசல்ராமன் (வயது23). சென்னையில் கால் டாக்சி டிரைவராக உள்ளார். சென்னை அசோக் நகரை சேர்ந்த 26 வயது இளம்பெண் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.

வங்கியில் பணம் செலுத்த செல்லும் போது கோசல்ராமனுக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கோசல்ராமன் இளம்பெண் வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கோசல்ராமன் பல இடங்களுக்கு அழைத்து சென்று தனிமையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோசல்ராமனிடம் வலியுறுத்தியுள்ளார்.

திருமணம் செய்து கொள்ள விரும்பாத கோசல்ராமன் சென்னையில் இருந்து ஜோலார்பேட்டைக்கு திரும்பினார்.

இதனை அறிந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். அவர் கடந்த 27-ந்தேதி ஜோலார்பேட்டைக்கு வந்து கோசல்ராமனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் வலியுறுத்தினார்.

கோசல்ராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கோசல்ராமன் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

9-வது நாளாக அவர் தர்ணாவில் ஈடுபட்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோசல்ராமனின் குடும்பத்தார் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர் கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இளம்பெண் ஜோலார்பேட்டை போலீசார் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com