6 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 48 அடிக்கு கீழ் சென்றது

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
Bhavanisagar Dam
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 48.94 அடியாக குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி பவானிசாகர் அணை நீர்மட்டம் 48.20 அடியாக குறைந்து இருந்தது. அதன் பின்னர் தற்போது தான் 48 அடிக்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கனஅடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கனஅடியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நீர்வரத்து இன்றி பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தற்போது பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com