பவானிசாகர் அணை பகுதியில் தண்ணீருக்குள் இறந்து கிடந்த 6 வயது பெண் யானை

பவானிசாகர் அணை பகுதியில் தண்ணீர் குடித்த பிறகு யானை சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்து பின்னர் உயிரை மாய்த்து இருக்கலாம் என தெரிகிறது.
தண்ணீரில் பிணமாக கிடந்த பெண் யானை.
தண்ணீரில் பிணமாக கிடந்த பெண் யானை.
Published on

சிறுமுகை:

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் சமீப காலமாக யானைகள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட பெத்திகுட்டை மயில்மொக்கை வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அங்கு பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில் 6 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று தண்ணீருக்குள் இறந்து கிடந்தது.

தகவல் அறிந்த சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தண்ணீரில் இறந்து கிடந்த யானையை நிலப்பகுதிக்கு மீட்டு கொண்டு வந்தனர். கால்நடை மருத்துவர் தியாகராஜன் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். யானையின் உடல்பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது வனப்பகுதியில் வெயில் சுட்டெரிப்பதால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வன விலங்குகள் தண்ணீரை தேடி வனத்தையொட்டிய கிராமங்களுக்குள் படையெடுக்க தொடங்கி உள்ளன. இதனை கருத்தில் கொண்டு வனப்பகுதியில் குட்டைகள் அமைத்து வனத்துறையினர் வனவிலங்குகளுக்காக தண்ணீர் நிரப்பி வருகிறார்கள்.

இறந்து கிடந்த யானையும், தண்ணீரை தேடி வந்து ஆற்றுக்குள் இறங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. தண்ணீர் குடித்த பிறகு யானை, சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்து பின்னர் உயிரை மாய்த்து இருக்கலாம் என தெரிகிறது.

இருந்தாலும் பிரேத பரிசோதனை ஆய்வு முடிவில் தான் அந்த யானை எப்படி இறந்தது? என்பது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com