யானைகளிடம் இருந்து மரபணு மாதிரிகளை கால்நடை டாக்டர்கள் குழுவினர் சேகரித்த காட்சி.
யானைகளிடம் இருந்து மரபணு மாதிரிகளை கால்நடை டாக்டர்கள் குழுவினர் சேகரித்த காட்சி.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளின் மரபணுக்கள் சேகரிப்பு

பொள்ளாச்சி அடுத்த கோழிகமுத்தி முகாமில் உள்ள 19 வளர்ப்பு யானைகளின் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
Published on

ஆனைமலை:

டாப்சிலிப், கோழிகமுத்தி மற்றும் வரகளியாறு பகுதியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் வனத்துறை மற்றும் தனியார் பராமரிப்பில் உள்ள வளர்ப்பு யானைகளின் மரபணு மாதிரிகளை சேகரிக்க மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனடிப்படையில், நாடு முழுவதும் உள்ள வளர்ப்பு யானைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதில் இருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது தமிழகத்தில் இந்த பணிகள் தொடங்கியுள்ளன.

அதன்படி முதல் கட்டமாக பொள்ளாச்சி அடுத்த கோழிகமுத்தி முகாமில் உள்ள 19 வளர்ப்பு யானைகளின் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற இந்த பணியில், மத்திய அரசின் யானைகள் பாதுகாப்பு திட்ட ஆராய்ச்சியாளர் முத்தமிழ்ச் செல்வன், வன கால்நடை மருத்துவர்கள் சுகுமார், சதாசிவம், கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் யானைகளிடம் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.

மீதமுள்ள 8 யானைகள் மஸ்த்தில் உள்ளதால் யானைகள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு ரத்த மாதிரிகள் விரைவில் சேகரிக்கப்பட்டு டேராடூனில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அனைத்து வளர்ப்பு யானைகளின் மரபணு மாதிரிகள் சேகரிப்பதற்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டேராடூனில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் யானைகளுக்கு கியூ ஆர் கோர்டு வழங்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

யானைகளின் இடபெயர்ச்சியின்போது யானைகள் மாறி போகலாம். அப்போது இந்த கியூ ஆர் கோர்டு வைத்து யானைகளை கண்டறிவது, போன்ற பல அம்சங்கள் உள்ளது என மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com