தனியார் உரத்தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தலைப் புறக்கணித்த 5 கிராம மக்கள்

அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தனியார் உரத்தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தலைப் புறக்கணித்த 5 கிராம மக்கள்
Published on

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி-காரியாபட்டி சாலையில் உள்ள கே.சென்னம்பட்டி கிராமத்தில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கோழி இறைச்சிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகளை சுத்திகரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த உர தொழிற்சாலையால் கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்று வட்டார பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

மேலும் இந்த ஆலையால் 5 கிராமங்களில் மண்வளம், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதாகவும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த பகுதி வறண்ட பூமியாக மாறிவிடும் என்று கூறி சம்பந்தப்பட்ட உர ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே கிராமத்தினர் மனு அளித்திருந்தனர்.

இந்தநிலையில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் 5 கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் செந்தாமரை, ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இதைத்தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் தொடர்ந்து ஆலையை மூட நடவடிக்கை எடுக்காததால் நேற்று தாசில்தார் செந்தாமரையிடம் உரத் தொழிற்சாலையை மூடநடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக ஐந்து கிராம மக்கள் மனு அளித்திருந்தனர். இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி 5 கிராம மக்களும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் 5 கிராமங்களில் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனை அறிந்த திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, தாசில்தார் செந்தாமரை, திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் தலைமையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட உரத் தொழிற்சாலை மூடப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க போவதாக மக்கள் தெரிவித்ததால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com