

தமிழ்நாடு மின்வாரியத்தில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு பிரச்சனையை சரிசெய்வது, மாதாந்திர பராமரிப்பு பணி உள்ளிட்டவை தாமதமாகி வருகின்றன.
எனவே தமிழகத்தில் நிலவும் மின்சார பிரச்சனையை சரிசெய்யும் பொருட்டு தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் உள்ள முக்கிய காலிபணியிடங்களை நிரப்புவதற்காக, ஓய்வுபெற்ற பொறியாளர்கள், ஃபோர்மேன்கள் மற்றும் லைன் இன்ஸ்பெக்டர்களை பணியமர்த்தும் வேலை நடைபெற்று வருகிறது.
இதுவரை 110 KV துணை மின் நிலையங்களில் பணிபுரியும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, ஒரு நாளைக்கு ரூ.750 மற்றும் 33/11 KV துணை மின் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய குறைந்த ஊதியம் காரணமாக பல முக்கிய பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.
இதனை சரிசெய்யும் வகையில், TNPDCL ஒய்வுபெற்ற பணியாளர்களில் 50 சதவீதத்தினரை துணை மின் நிலையங்களில் வழக்கமான ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்றவர்களுக்கான சம்பளம் மாதம் ரூ.30 ஆயிரம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.766-இல் இருந்து ரூ.965 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வருங்கால வைப்பு நிதி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றுடன் சேர்த்து, ஒரு ஒப்பந்த தொழிலாளிக்கு ஊதியமாக தரவேண்டிய தொகை நாளொன்றுக்கு ரூ.1,324-ஆக இருக்கும்.