Poll Day | தமிழ்நாடு சட்டசபை தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு

மாநிலம் முழுவதும் 75,032 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Poll Day | தமிழ்நாடு சட்டசபை தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது வாக்குப் பதிவு
Published on

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23) சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் த.வெ.க. என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்த சட்டமன்ற தேர்தலில் 4,023 தகுதியுள்ள வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.

தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவர். மாநிலம் முழுவதும் 75,032 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நாளான இன்று காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. மாதிரி வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி தலைமை அலுவலர், மற்ற 3 அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் இருந்தனர். இதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க 3 வகை கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. அதன்படி, தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோரின் கட்டுப்பாட்டில் வரும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 3,022 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினரும், அதே சமயம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில ஈடுபடுகிறார்கள்.

மேலும், சுமார் 1.47 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பாதுகாப்பு பணிக்காக 295 கம்பெனிகளை சேர்ந்த சுமார் 23,000 துணை ராணுவ படையினரும் தமிழகம் வந்து பாதுகாப்பு பணியில் உள்ளனர். சென்னையில் பாதுகாப்பு பணிக்காக 31 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com