பொது இடங்களில் மாடு வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

பக்ரீத்திற்கு பசுக்களை பலியிடுவது கட்டாயமல்ல என்ற உயர் நீதிமன்றக் கருத்துக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
HC ban on cow and calf slaughter during Bakrid in Supreme Court
Published on: 

பக்ரீத் உள்ளிட்ட வேறு எந்த நாட்களிலும் தமிழகத்தில் பசு அல்லது கன்றுகளை வெட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே 27ம் தேதி ஆணை பிறப்பித்தது.

மேலும் தமிழ்நாட்டில் கால்நடைப் பாதுகாப்பு சட்டங்களை அரசு கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கே. சூர்யா பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் தற்காலிகக் கொட்டகைகள் அமைத்துப் பசுக்கள் சட்டவிரோதமாக வதைக்கப்படுவதாக மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.

காவல்துறையினர் தற்காலிகப் பகுதிகளை வதைக்கூடங்களாக அறிவிக்க எவ்வித அதிகாரமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்தத் தடையை உறுதி செய்யத் தமிழகத் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

சட்டத்தின்படி விலங்குகளை வதைப்பதாக இருந்தால், அவை உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டு, முறையான உரிமம் பெற்ற இறைச்சி கூடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

மேலும், பக்ரீத் பண்டிகையின் போது பசுக்களை மட்டுமே பலியிட வேண்டும் என்பது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளில் கட்டாயமாக்கப்பட்ட ஒன்று அல்ல என்றும், பிற விலங்குகளையும் பலியிட முடியும் என்றும் தெரிவித்தது. இந்த ஆணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com