

தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய ராணுவத்தில் திறம்படப் பணியாற்றி, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்தவரும், மரணத்திற்குப் பிறகு, இந்திய அரசின் அமைதிக்கால உயரிய விருதான அசோக சக்கரம் விருது பெற்றவருமான மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட தரம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' எனப் பெயர் சூட்டிட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜயை, இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி லெப்டினண்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி, AVSM, SC, SM அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையினை் கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர், இக்கோரிக்கையின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு, இந்தியத் திருநாட்டிற்காகப் போராடி உயிர்நீத்த வீரரின் மாபெரும் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தமிழில் 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' எனவும், ஆங்கிலத்தில் 'MAJOR MUKUND VARADARAJAN' எனவும் பெயர் சூட்டப்படுகிறது.
மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்கள், தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட ஆனந்தபுரத்தை சேர்ந்தவர். இவர் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டபடிப்பிற்கான நிறைவுசெய்து பின்னர் ராணுவத்தில் பணிபுரிந்து திறம்படப் பணியாற்றி, பணியின்போது வீர மரணம் அடைந்ததால் இவர், 'தாம்பரம் மண்ணின் மைந்தர்' எனப் போற்றப்பட்டு வருகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டதற்குப் பொதுமக்கள் மற்றும் ராணுவக் குடும்பத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.