தாம்பரத்தில் ரூ.1.25 கோடி செலவில் உருவாகும் பெண்களுக்கான பிரத்யேக ‘பிங்க் பார்க்’

செம்பாக்கம் பகுதி பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள் இன்றி உடற்பயிற்சி செய்யும் வகையில், இந்த பிரத்யேக பூங்காவை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Tambaram Pink Park
Published on

செம்பாக்கம் பெண்கள் பூங்கா:

தாம்பரம், செம்பாக்கத்தில் (வார்டு 23, மண்டலம் 3) உள்ள நடேசன் நகர் 2வது தெருவில், பெண்களுக்கென பிரத்யேகமான ‘பிங்க் பார்க்' ஒன்றை அமைக்கும் பணியில் அம்மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்காக ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.

செம்பாக்கம் பகுதி பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகள் இன்றி உடற்பயிற்சி செய்யவும், ஓய்வெடுக்கவும், நேரத்தைச் செலவிடவும் அப்பகுதியில் இந்த பிரத்யேக பூங்காவை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த வளாகத்தில் பெண்களுக்கென பிரத்யேகமான உடற்பயிற்சி கூடம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், நடைபயிற்சி தடங்கள், அமரும் இடங்கள், வயதான பெண்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

இந்த பூங்காவை அனைத்து மகளிரும் பயன்படுத்தும் வகையில் பார்வையற்றோர், ஆட்டிசம் பாதிக்கப்பட்டோர் மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்காக, சக்கர நாற்காலிக்கு ஏற்ற ஊஞ்சல்கள், மணல் திட்டுகள் மற்றும் தரை மட்ட ராட்டினங்கள், விளையாட்டு உபகரணங்களும் இடம்பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com