

தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படி நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையை அறிவது, அவற்றின் வாழிடங்களை பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந்தேதி வரையாடுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த பணிகளில் தமிழகம், கேரளத்தை சேர்ந்த 2 மாநில வனத்துறையினரும் மேற்கொண்டனர்.
இந்த கணக்கெடுப்பின்மூலம் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் முக்கூர்த்தி தேசிய பூங்கா, வால்பாறை, பொள்ளாச்சி வனச்சரகம் உள்ளிட்ட இடங்களில் 1331 வரையாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான வரையாடு கணக்கெடுப்பு பணிகளை தமிழகம், கேரள மாநில வனத்துறை சார்பில் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை 4 நாட்கள் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
இதன் ஒருபகுதியாக ஆனைமலை புலிகள் காப்பகம், ஆழியார் மங்கரை மற்றும் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் உயிரியலாளர், வனக்காப்பாளர் மற்றும் 2 வேட்டை தடுப்பு காவலர்கள் என 4 பேர் இன்று காலை முதல் வரையாடு கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்த கணக்கெடுப்பில் வரையாடுகளின் எச்சம், கால் தடம், மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் வரையாடுகளின் எண்ணிக்கையை பதிவு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 176 இடங்களில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.