

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காக நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.
அதிலும் குறிப்பாக கோடை சீசன் காலமான ஏப்ரல்-மே மாதங்களில் குளிரான கால நிலையை அனுபவிப்பதற்காக ஊட்டிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகின்றன. மேலும் சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி, புகைப்பட கண்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள், போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கோடைசீசன் விழா கடந்த 14-ந் தேதி ரோஜா கண்காட்சியுடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 18-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடந்தது. 11 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியை 2 லட்சத்து 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நேற்றுவரை மொத்தம் 7 லட்சம் பேர் தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 6 பேரும், மே மாதத்தில் நேற்று வரை 4 லட்சத்து 34 ஆயிரத்து 511 பேரும் வந்திருந்தனர்.
கடந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் பூங்காவுக்கு 6 லட்சத்து 6 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்திருந்த னர். பள்ளிகள் திறப்பு ஜூன் 4 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.