

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியில் பெத்லகேம் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 2026 - 2027-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் எண்ம முறையில் புதுமையாக முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும், பெற்றோர்களுக்கு எளிய மற்றும் விரைவாக தங்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் நோக்கிலும், பள்ளி ஆசிரியர்கள் இணைந்து கியூ.ஆர். கோடு அடிப்படையில் ஆன்லைன் சேர்க்கை முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
பள்ளி வளாகம், முக்கிய தெருக்களின் சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கியூ.ஆர். கோடுடன் கூடிய விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
பெற்றோர்கள் தங்களது செல்போன் மூலம் கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து, மாணவர்களின் பெயர், வகுப்பு, பெற்றோர் விவரம் உள்ளிட்ட தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்து உடனடியாக சேர்க்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு நேரில் பல முறை வர வேண்டிய அவசியம் இல்லை. தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
மேலும், பள்ளியில் திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள், டிஜிட்டல் வகுப்பறை வசதி, கணினி மற்றும் திறமையான கற்றல், விளையாட்டு மற்றும் கலைப் பயிற்சிகள், பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான பள்ளி சூழல், மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கற்றல் ஆகிய பல்வேறு சிறப்பு அம்சங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
கல்வித் துறையில் எண்ம திறம்பட தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தொழில் நுட்ப முன்னேற்றத்தில் செயல்படுகின்றன என்பதற்கு இந்த முயற்சி சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டில் அதிகளவில் மாணவர் சேர்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர்.