

சென்னை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1-ந்தேதி மாணவர் சேர்க்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2026-27 ம் புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. சைதாப்பேட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 35 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு 4 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களை சேர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கல்வி அதிகாரிகள் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னையை பொருத்தவரையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அரசு பள்ளிகள் மிகக் குறைந்த அளவிலே செயல்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.