வேளச்சேரி-பரங்கிமலை இணைப்பு: மூன்றடுக்கு ரெயில் நிலையமாக முகம் மாறும் பரங்கிமலை நிலையம்

வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு வரும் புறநகர் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-ம் தளத்துக்கு வரும்.பயணிகள் ரெயில்களை வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
வேளச்சேரி-பரங்கிமலை இணைப்பு: மூன்றடுக்கு ரெயில் நிலையமாக முகம் மாறும் பரங்கிமலை நிலையம்
Published on

சென்னை:

சென்னையை பொறுத்தவரை புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில் சேவைகள் பொதுமக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மின்சார ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த ரெயில்களை நம்பி நீண்ட தூரத்தில் இருந்தும் பொதுமக்கள் சென்னைக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். சென்னை மக்களின் ஒரு வரப்பிரசாதமாக புறநகர் ரெயில் சேவைகள் இருந்து வருகிறது.

சென்னையில் தீராத தலைவலியாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பஸ், கார், இருசக்கர வாகனங்களில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியுமா...? என்பது கேள்விக்குறிதான். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் கேட்கவே வேண்டாம். சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் நத்தை போலதான் ஊர்ந்து செல்லும். இதில் இருந்து தப்பிக்க ரெயில் சேவைகள் பொதுமக்களுக்கு, பெரிதும் கை கொடுத்து வருகிறது.

கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவை பயன்பாட்டில் இருந்த நிலையில் மற்றொரு புதிய வழித்தடமாக கடற்கரை, வேளச்சேரி வழியாக பரங்கிமலைக்கு பறக்கும் ரெயில் பாதை திட்டம் 1995-ல் உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக கடற்கரையில் இருந்து சிந்தாதிரிபேட்டை, கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், தரமணி, பெருங்குடி வழியாக வேளச்சேரி வரை ரெயில் இயக்கப்பட்டது.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட வேளச்சேரி- பரங்கிமலையை இணைக்கும் வகையில் ரூ.730 கோடி செலவில் கடந்த 2008-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு பாதை அமைப்பதில் நிலம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட்டு நேரடியாக தலையிட்டதால் தீர்வு ஏற்பட்டது. இதனால் பணிகள் மீண்டும் வேகமெடுத்தன. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்ததால் மீண்டும் பணிகள் முடங்கியது.

பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. 17 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வேளச்சேரி-பரங்கிமலை இணைப்பு பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ளகரம், ஆதம்பாக்கம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளது.

தண்டவாளம் அமைக்கும் பணிகள் நூறு சதவீதம் நிறைவடைந்ததால் ரெயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) அல்லது ஜனவரிக்குள் இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த இணைப்பின் மூலம் பரங்கிமலை ரெயில் நிலையம் பெரிய சந்திப்பாக மாறி இருக்கிறது.

பறக்கும் ரெயில், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் ஆகிய 3 ரெயில் சேவைகளும் சந்திக்கும் மிகப்பெரிய ரெயில்வே முனையமாக பரங்கிமலை மாறி உள்ளது.

வேளச்சேரியில் இருந்து பரங்கிமலைக்கு வரும் புறநகர் பறக்கும் ரெயில் மெட்ரோ ரெயில் நிலையத்தின் 2-ம் தளத்துக்கு வரும். இதில் ஆதம்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் பாதைக்கு மேலே மேம்பாலத்தின் மீது மெட்ரோ ரெயில் செல்லும். பரங்கிமலை வழியாக சோழிங்கநல்லூர் செல்லும் மெட்ரோ ரெயில்கள் இந்த வழித்தடத்தில் மடிப்பாக்கம், கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம் வழியாக செல்லும்.

வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரெயில் வந்து செல்லும் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தின் 2-ம் தளத்தில் பயணச்சீட்டு வழங்குமிடம், அலுவலக அறைகள், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளன.

மெட்ரோ ரெயில் நிலையத்தின் தரை தளத்தில் இருந்து பறக்கும் ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம், பரங்கிமலை மின்சார ரெயில் நிலையம் ஆகியவற்றுக்கு பயணிகள் எளிதாக செல்லும் வகையில் படிக்கட்டுகள், நகரும் படிக்கட்டுகள், லிப்ட் வசதிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து ரெயில் சேவைகளும் பரங்கிமலையில் செயல்பட தொடங்கியதும் பரங்கிமலையின் முகமே மாறி இருக்கும்.

வேளச்சேரி- பரங்கிமலை வழித்தடத்தில் ஒரு ரெயில் என்ஜீன் மற்றும் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு தண்டவாளம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதை அறிய சோதனை நடத்தப்பட்டது.

வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை ஒவ்வொரு நிலையத்திலும் நிறுத்தி ரெயிலின் இயக்கம், பிரேக் சிஸ்டம், மின் இணைப்புகள், சிக்னல் இணைப்புகள், ஆகியவை பரிசோதிக்கப்பட்டது.

இந்த சோதனை ஓட்டம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து பயணிகள் ரெயில்களை வைத்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சோதனைக்கு பின்னர் ரெயில்களை இயக்க ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளிப்பார். அதன்பிறகு ரெயில்கள் வேளச்சேரி-பரங்கிமலை இடையே இயக்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு பகுதி மக்களின் கனவு நிறைவேற இருக்கிறது. சென்னை புறநகர் பகுதியான பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் சென்னையின் பிறபகுதிகளுக்கு இனி விரைவாக பயணிக்க முடியும்.

சென்னை ஓ.எம்.ஆர்., ஈ.சி.ஆர்., அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி போன்ற சென்னையின் மையப்பகுதிக்கு செல்வது புறநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பயணம் இனி எளிதாகி விடும்.

குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த பறக்கும் ரெயில் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் போக்குவரதது நெரிசலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

பரங்கிமலை ரெயில் நிலையம் சமீபத்தில் தான் நவீன மயமாக்கப்பட்டு புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. தற்போது பறக்கும் ரெயில் நிலையமும் செயல்பட இருப்பதால் பரங்கிமலையின் முகமே மாறிவிடும். தாம்பரம் போல மிகமிக, முக்கியமான ரெயில் நிலையமாக உருவெடுக்கும். இங்கிருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அது மட்டுமின்றி இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

பரங்கிமலையில் புறநகர் மின்சார ரெயில் சேவை, மெட்ரோ ரெயில் சேவை, பறக்கும் ரெயில் சேவை, மாநகர பஸ் சேவைகள் ஒரே இடத்தில் கிடைப்பதாலும் இங்கிருந்து வேளச்சேரி போன்ற பகுதிகளுக்கு மிகவும் எளிதாக செல்லலாம் என்பதாலும் எப்போது பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com