சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

முன்பதிவு பயணிகள் வசதிக்காக திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கு 30-ந்தேதி முதல் 1 மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்படுகின்றன.
சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

தமிழ் மாதங்களில் வரும் பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் சென்னை, வேலூர், திருத்தணி, காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிதம்பரம், விழுப்புரம், ஓசூர் மற்றும் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் சித்ரா பவுர்ணமி வருகிற 1-ந்தேதி வருகிறது. இதையொட்டி நாளை மறுநாள் முதல் மே 2-ந்தேதி இரவு வரை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சேலம் கோட்டம் சார்பில் சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு பயணிகள் வசதிக்காக திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கு 30-ந்தேதி முதல் 1 மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்படுகின்றன. அவற்றிற்கு பயணிகள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம், தர்மபுரி மற்றும் ஓசூர் பஸ் நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல முன்பதிவு செய்யப்படுகிறது. எனவே பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com