சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்!

இந்த விபத்தில் ஆலைக்குள் பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர் பலத்த தீக்காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sivakasi firecracker factory
Published on

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கோப்பையநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பட்டாசு உற்பத்தி ஆலையில் இன்று மதியம் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக வேதிப்பொருட்கள் தீப்பற்றி எரிந்து, அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளன.

இந்த வெடி விபத்தின் தாக்கம் காரணமாக ஆலை வளாகத்தில் இருந்த 4-க்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.

ஆலைக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துக் கொண்டே இருந்ததால், உடனடியாகத் தீயைக் கட்டுப்படுத்துவதில் மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவால்கள் ஏற்பட்டன. எனினும், தீயணைப்பு வீரர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் போராடித் தீயை ஓரளவிற்குக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் எவரேனும் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில், மீட்புப் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த விபத்தில் ஆலைக்குள் பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர் பலத்த தீக்காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறையினர், இந்த விபத்து விதிமுறை மீறல்களால் ஏற்பட்டதா அல்லது போதிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லையா என்பது குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பட்டாசு ஆலை விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகை சூழ்ந்து காணப்படுவதால் உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பும் சோகமும் நிலவி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com