சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ரூ.2.6 கோடி மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல்

அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறிய பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்தனர்.
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ரூ.2.6 கோடி மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல்
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில், வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு வடக்கு தொகுதி பறக்கும் படை அதிகாரி ஜெயந்தி தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்ப்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி, வெள்ளி குத்து விளக்கு உள்பட 112 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 2 கோடியே 60 லட்சம் ஆகும்.

அதனை தொடர்ந்து காரில் இருந்த வெள்ளி வியாபாரியான செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரிடம் விசாரணை நடத்திய போது வியாபாரத்திற்காக கடைகளுக்கு கொண்டு செல்வதாக கூறினார்.

ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறிய பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதனை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் உரிய ஆவணங்களை காட்டி பெற்று செல்லுமாறு அதிகாரிகள் வெள்ளி வியாபாரி சுந்தர்ராஜனிடம் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com